Friday, 10 June 2011

ப்ரார்த்தனை

குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.

 குன்றா மதுமலர்ச் சோலை
குன்றாத தேனையுடைய பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும்
வண்கொடிப் படப்பை,
வெற்றிலைத் தோட்டங்களை யுடையதும்
வருபுனல் பொன்னி
எப்போதும் பெருகுகின்ற தீர்த்தத்தை யுடைய காவேரி
மாமணி யலைக்கும்,
சிறந்த ரத்னங்களை அலையெறிந்து கொழிக்கப் பெற்றதும்
செந்நெலொண் கழனி
செந்நெற் பயிர்களாலே அழகிய கழனிகளை யுடையதும்
திகழ்வன முடுத்த,
விளங்குகின்ற வனங்களை உடையதும்
கற்போர் புரிசை
 வித்வான்களின்  நகரமாகச் செய்யப்பெற்றதும்
கனக மாளிகை,
பொன்மயமான மாளிகைகளின்றும்
நிமிர்கொடி
மேல்முகமாய் ஓங்குகின்ற த்வஜங்களானவை
விசும்பில் இளம்பிறை துவக்கும்,
ஆகாயத்திலுள்ள பாலசந்திரனை ஸ்பர்சிக்கப்பெற்றதும்
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை
செல்வம் நிறைந்ததுமான தென் திருக்குடந்தையிலே
 அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க,
பிராமணர்கள் வேதவாக்குகளைச் சொல்லிக் கொண்டு வணங்கும்படியாக
ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம, 
படமெடுத்தாடுகிற ஆதிசேஷனாகிற சயனத்தில் யோக நித்திரை செய்வதில் ஆஸக்தனான ஸர்வேச்வரனே!
நின் அடியிணை பணிவன்
(இந்த ஸம்ஸாரத்தில் நேரக்கூடிய துக்கங்களை நீங்க) உன்னுடைய உபயபாதங்களை ஆச்ரயிக்கின்றேன்
வருமிடர் அகல மாற்றோ வினையே.
 ஸம்ஸாரத்துன்பங்களை போக்கி யருளவேணும்

 கிடந்தவாறு எழுந்து பேசு என்ற திருமழிசையாழ்வார் போலும்,
ஆராவமுதே, உடலம் என்பால் அன்பாயே என்ற நம்மாழ்வார் போலவும்
தானும் குடந்தை ஆராவமுதனையே சரணம் அடைந்து,
நீ கைவிட்டாலும் கைவிடாத உன் திருவடிகளைப் பற்றுகிறேன் என்று தலைக்கட்டுகிறார்.

No comments:

Post a Comment